செய்திகள்

மதுரை திருநகரில் கோவில் உண்டியல் கொள்ளை- ரெயில்வே ஊழியர் வீட்டிலும் கைவரிசை

Published On 2018-12-06 15:24 GMT   |   Update On 2018-12-06 15:24 GMT
கோவில் பூட்டை உடைத்து உண்டியல்களை கொள்ளையடித்த மர்ம மனிதர்கள், ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளிலும் புகுந்து கை வரிசை காட்டியுள்ளனர்.

மதுரை:

மதுரை திருநகர் மருது பாண்டி நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தா. வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோல பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்சி சென்று விட்டார். இவரது வீட்டின் பூட்டை உடைத்தும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பினால் தான் எவ்வளவு நகை போனது என்பது தெரியவரும்.

இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

அங்கிருந்த 2 உண்டியல்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் உள்ளே இருந்த பணத்தை எடுத்து விட்டு பின்பக்கமாக உண்டியலை போட்டு சென்றுள்ளனர்.

மேலும் கோவில் கருவறையில் இருந்த வெள்ளி கவசம், உற்சவர் சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு , கை ரேகைகளை சேகரித்தனர். திருட்டு குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

ஒரே பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News