செய்திகள்

லஞ்ச புகாரில் சஸ்பெண்டு: காஞ்சீபுரம்-கூடலூர் நகராட்சி கமி‌ஷனர்களிடம் போலீஸ் விசாரணை

Published On 2018-12-06 10:24 GMT   |   Update On 2018-12-06 10:24 GMT
லஞ்ச புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட காஞ்சீபுரம் மற்றும் கூடலூர் நகராட்சி கமி‌ஷனர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தவர் சர்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஊட்டி நகராட்சியில் கமி‌ஷனராக வேலை பார்த்த போது, கட்டிட அனுமதி, வரைபட அனுமதி போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

அப்போது அதே அலுவலகத்தில் மேலாளராக பார்வதி பணியாற்றினார். தற்போது அவர் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் சர்தாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அதேபோல் பார்வதி தங்கி இருந்த நகராட்சி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

அதன்படி காஞ்சீபுரம் கமி‌ஷனர் சர்தார், கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சீபுரம் நகராட்சி பொறுப்புக்கு செயற் பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஏதுவாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தான் தெரிவித்து உள்ளார்.

எனவே பார்வதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இதேபோல் சர்தாரிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News