செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் ஏ.டி.எம். மையம் செயல்படாததால் பொதுமக்கள் அவதி

Published On 2018-12-05 10:30 GMT   |   Update On 2018-12-05 10:30 GMT
ஒட்டன்சத்திரத்தில் ஏ.டி.எம். மையம் இயங்காததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இ-கார்னர் வசதியுடன் பணம் எடுக்க, செலுத்த எந்திரங்கள் உள்ளன. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெளியூரில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர்

மேலும் வேலைக்கு செல்பவர்கள், உதவி தொகை பெறுபவர்கள் என ஏராளமானோர் இந்த மையத்தை பயன்படுத்தி வந்தனர். வங்கியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் பணம் செலுத்த ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை.

24 மணி நேர சேவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 24 மணி நேரமுமே வேலை செய்யவில்லை என்ற அறிவிப்பு பலகை மட்டுமே தொங்குகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் அலைந்து பணம் எடுத்து வருகின்றனர். மேலும் வேறு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில் கூறுகையில், ஏ.டி.எம். சேவை முடங்கியது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து குறைந்த பட்ச நிலுவைத் தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அதற்கான பராமரிப்பு இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News