செய்திகள்

அனுமதிக்கப்பட்ட தொகையை விட கோவையில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

Published On 2018-12-04 09:55 GMT   |   Update On 2018-12-04 09:55 GMT
கோவையில் இருந்து சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை:

கோவை மண்டலத்தில் 1200 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் சில வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் அரசு அனுமதித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து பொது தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் சில தகவல்கள் கேட்டார். அதில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு ரூ.45 கட்டணம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் ரூ.64 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.45 மட்டும் தான். வால்பாறை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் தான் ரூ.64 கட்டணமாக உள்ளது என கூறுகின்றனர். ஆனால் வால்பாறை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் சாதாரண பஸ்களை கூட எக்ஸ்பிரஸ் பஸ் என பெயரை மட்டும் மாற்றி விட்டு, ரூ.64 கட்டணமாக வசூலிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர்காஸ் அமைப்பின் நிர்வாகி கதிர்மதியோன் கூறியதாவது:-

கோவையில் இருந்து சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கோவை -திருப்பூருக்கு அரசு கட்டணம் ரூ.33-க்கு பதிலாக சில பஸ்களில் ரூ.36 வசூலிக்கப்படுகிறது.

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு அரசு அனுமதித்த ரூ.61-க்கு பதிலாக ரூ.85 வசூலிக்கின்றனர். ஆனால் தனியார் பஸ்களில் ரூ.65 மட்டும் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து இணை கமி‌ஷனரிடம் புகார் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News