செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-12-03 10:35 GMT   |   Update On 2018-12-03 10:35 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sterliteplant #tuticorincollectoroffice

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை வெளியிட்டது.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனிடையே ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான பசுமை தீர்ப்பாய குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் கூறியது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில அமைப்புகள் பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஆலையை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமானோர் மனு கொடுக்க வந்திருந்தனர். இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டி ருந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பாக வக்கீல் கிருஷ்ண மூர்த்தி, பிரபு, வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, ‘தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறவழியில் போராடுவோம். தமிழக அரசு உடனடியாக சட்ட மன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்கள். தொடர்ந்து அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறி முகத்தில் கவசம் அணிந்து வந்தார்கள்.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு திரண்டு நின்ற பெண்கள் கூறுகையில், ‘பசுமை தீர்ப்பாய உத்தரவு பொதுமக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அரசு வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர்.

போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் அரிராகவன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் வருகிற 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்ற அனுமதியை பெற்று உண்ணாவிரதம் நடத்தப்படும்’ என்றனர். #Sterliteplant #tuticorincollectoroffice

Tags:    

Similar News