செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவருக்கு 2 நாள் சிறை தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-12-01 23:54 IST   |   Update On 2018-12-01 23:54:00 IST
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற ஒருவருக்கு 2 நாள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை:

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் கடந்த 28-ந் தேதி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு கோவை 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு 2 நாட்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு வேலுசாமி தீர்ப்புக்கூறினார்.

இதேபோல் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் (57) என்பவர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு கோவை 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட சோமசுந்தரத்துக்கு 5 நாட்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார். இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் ரேவதி ஆஜரானார்.

இதுகுறித்து அரசு வக்கீல் ஒருவர் கூறியதாவது:-

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதற்காக அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் சட்டவிரோத தொழிலுக்கு செல்லக் கூடாது என்பதற்காக தண்டனை விதிக்கப்படுகிறது.

இதில் தவறு செய்ததற்கு விதிக்கப்பட்ட தண்டனையை விட அபராதம் செலுத்த தவறினால் விதிக்கப்படும் தண்டனை அதிகம். எனவே பலர் அபராதத்தை செலுத்தாமல் சென்று விடுகின்றனர். தண்டனை விதிக்கப்பட்டு அபராத தொகை செலுத்தாதவர்கள் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் அபராத தொகையை செலுத்தி விடுவார்கள். அதனால் தான் தவறுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை விட அபராதம் செலுத்தாததற்கு அதிக தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறைக்கு சென்று சிறை நிர்வாகம் சொல்லும் ஏதாவது ஒரு வேலையை கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால் மெய்க்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையில் வேலை எதுவும் செய்ய வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News