செய்திகள்

திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை

Published On 2018-12-01 11:41 IST   |   Update On 2018-12-01 11:41:00 IST
திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில் கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது. 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இதுவாகும்.

இக்கோவிலில் நேற்று பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்த பிறகு இரவு கோவிலை பூசாரிகள் பூட்டிச் சென்றனர்.

இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு தனியாக கழற்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது.

இது குறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இக்கோவிலில் பஞ்சலோக சிலைகள் இருந்தன. இங்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பஞ்சலோக சிலைகள் திருப்பாச்சூரில் உள்ள வசிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சலோக சிலைகள் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது.

கடந்த ஆண்டு இக்கோவிலில் கலசம் திருடு போயிருந்தது. தற்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பது கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News