செய்திகள்

கஜா புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2018-11-30 10:00 IST   |   Update On 2018-11-30 10:00:00 IST
கொடைக்கானலில் கஜா புயலால் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்ததால்தான் இங்கு வரவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #DindigulSreenivasan
பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது கொடைக்கானல் மலைச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நானும், துணை முதல்-அமைச்சரும், அதிகாரிகளும் மறுநாளே பார்வையிட வந்தோம்.

நிலச்சரிவை சீரமைத்து போக்குவரத்தை விரைவில் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். மலை கிராமங்களில் புயலால் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டோம். அப்போது எங்களுடன் வந்திருந்த போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேஷ்வரன் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

அதன் காரணமாகவே நாங்கள் புயல் பாதித்த மாவட்டங்களான நாகை, திருவாரூர் பகுதிக்கு சென்று விட்டோம். அதன்பிறகு கொடைக்கானலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காமனூர் ஊராட்சி பகுதியில் 43 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மதியம் 12.30 மணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். அமைச்சர் வருகை ரத்து என தகவல் வந்ததால் அதிகாரிகளே அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அதன்பிறகு அமைச்சர் சீனிவாசன் வருகை உறுதி செய்யப்பட்டதால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.

பின்னர் அமைச்சர் வந்தவுடன் நிவாரண பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், உதயகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சீனிவாசன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சையான பேச்சுகளை கூறி வருவது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கஜா புயல் பாதிப்பு குறித்தும் அமைச்சர் தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
Tags:    

Similar News