செய்திகள்
கடத்தப்பட்ட சிறுவன் செல்வகணபதி

மகளிர் சுய உதவி குழுவில் தவணை கட்டாததால் சிறுவனை கடத்திய பெண் கைது

Published On 2018-11-27 09:45 GMT   |   Update On 2018-11-27 09:45 GMT
மகளிர் சுய உதவிக்குழு தவணை செலுத்தாததால் சிறுவனை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்த ராஜூ மனைவி சுலோச்சனா (வயது48). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த குழுவில் குலாளர்பாளையத்தை சேர்ந்த வீரணன் மனைவி ராணி (29). உறுப்பினராக உள்ளார்.

இவர் ரூ.25 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை தவணை செலுத்தி வந்தார். கடந்த 2 மாதமாக ராணி தான் வாங்கிய கடனுக்கு தவணை கட்டாமல் இருந்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த சுலோச்சனா, ராணியின் வீட்டில் வந்து சத்தம்போட்டு சென்றார். நேற்று மாலையில் ராணியின் மகன் செல்வகணபதி (11) என்பவனை சுலோச்சனா பள்ளி முடிந்து வரும்போது வழியிலேயே மடக்கி கடத்தி சென்று விட்டார். தன் மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததை அறிந்த ராணி பள்ளியில் தேடி பார்த்தார். அங்கு தனது மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் கேட்டபோது சுலோச்சனா அழைத்து சென்றதாக கூறினர்.

அப்போது ராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய சுலோச்சனா நீ கட்ட வேண்டிய தவணை தொகையை செலுத்தி விட்டு உன் மகனை அழைத்து செல் என கூறினார். இதை கேட்டதும் பதறி போன ராணி போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சுலோச்சனா வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுவன் செல்வகணபதியை மீட்டனர். மேலும் பணத்திற்காக சிறுவனை கடத்தி சென்ற சுலோச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News