செய்திகள்

ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி

Published On 2018-11-26 18:08 GMT   |   Update On 2018-11-26 18:08 GMT
ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
ஊட்டி:

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. ஊட்டியில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைசீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 2-வது சீசன் அக்டோபர், நவம்பர் மாதங்களாகும். இதுபோன்ற சீசன் காலத்தை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சொந்த வாகனங்களில் வருகிறார்கள். ஆனால் அந்த வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஊட்டியில் அதிகளவில் ஆட்டோக்கள் இயங்குவதால், பல இடங்களில் ஆட்டோ நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி நகரில் குதிரை, பசு, எருமை, ஆடு போன்ற கால்நடைகள் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை, புளுமவுண்டன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும் போதும், சாலையோரத்தில் ஊட்டியின் சீதோஷ்ண காலநிலையை ரசித்தபடி நடைபாதையில் நடந்து செல்லும் போதும் கால்நடைகள் வேகமாக துரத்தி வந்து தாக்குகிறது.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை உண்பதற்காக, சிலர் தங்களது கால்நடைகளை பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். குதிரைகள் சாலைகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பயந்து ஓடும் போது வாகனங்கள், தடுப்பு கம்பிகளில் எதிர்பாராதவிதமாக மோதி சாலையோரத்தில் உள்ள குழிகளில் விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இரவில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு ஓடி வந்தது. இதனை கண்டு பயந்து ஒரு பெண் பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அதேபோல் தலைகுந்தா பகுதியில் குதிரை திடீரென ஓடி வந்ததில், மினி பஸ் டிரைவர் காயம் அடைந்தார். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முதியவரை தாக்கியதால், காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே கால்நடைகள் திடீரென செல்வதால், சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.

கடந்த வாரம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சுப்ரியா என்ற சுற்றுலா பயணி தனது குடும்பத்தினருடன் ஊட்டி சேரிங்கிராசில் சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மிரண்டு ஓடி வந்த தோடர் வளர்ப்பு எருமைகளில் ஒன்று சுப்ரியாவை முட்டி தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் ஊட்டியில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் ஊட்டியை சுற்றி பார்க்க வருபவர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு ஆஸ்பத்திரிக்கும், சொந்த ஊர்களுக்கும் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அப்போதைய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை கண்டறிந்து, அவைகளுக்கு உரிமம் பெறவும், சாலைகளில் கால் நடை கள் சுற்றித்திரியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், இந்த திட்டம் அதிகாரிகள் இடமாறி சென்றதால் செயல்படுத்தாமல் கைவிடப்பட்டு உள்ளது. தற்போது கால்நடைகள் ஊட்டி நகரில் சுற்றித்திரிவதால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டி நகர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
Tags:    

Similar News