செய்திகள்
ராஜாராம் என்கிற ராஜாவை கைது செய்த போலீசாரையும், பறிமுதல் செய்யப்பட்ட காரையும் படத்தில் காணலாம்

வாடகை பணம் தருவதாக கூறி நூதன முறையில் கார் திருடி சென்றவர் கைது

Published On 2018-11-26 11:59 GMT   |   Update On 2018-11-26 11:59 GMT
வாடகை பணம் தருவதாக கூறி காரை திருடி சென்றவரை பெருந்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:

ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அகமது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்கவில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
Tags:    

Similar News