செய்திகள்

புயல் தாக்கிய 4 மாவட்ட மாணவர்களின் ரூ.48 கோடி கல்வி கட்டணம் ரத்து- பாரிவேந்தர் அறிவிப்பு

Published On 2018-11-25 23:25 GMT   |   Update On 2018-11-25 23:25 GMT
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும், ‘கஜா’ புயல் தாக்கிய தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் ரூ.48 கோடி கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பாரிவேந்தர் அறிவித்துள்ளார். #gajacyclone #parivendhar
சென்னை:

இந்திய ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் அளவுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார். கடந்த 10 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகிறார்.

இந்தநிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்ட மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதாகவும், அவர்கள் எந்த கட்டணமும் இன்றி தங்களின் படிப்பை தொடரலாம் எனவும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

மேற்கண்ட 4 மாவட்டங்களிலிருந்து 650 மாணவர்கள் படிப்பதாகவும், அவர்களுக்கான நான்காண்டு கல்விக் கட்டணம் சுமார் ரூ.48 கோடி ஆகும். கல்வி கட்டண ரத்து செய்யப்பட்டிருப்பதின் மூலம், அவர்களது பெற்றோரின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ‘தானே’ புயலின்போதும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 350 மாணவர்களுக்கான ரூ.7.5 கோடி கல்வி கட்டணத்தை பாரிவேந்தர் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிவேந்தரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களின் இந்த அறிவிப்பு மிகுந்த மனிதநேயமிக்கதாகும். அந்த வகையில் உங்களின் இந்த அறிவிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்’, எனவும் பாரிவேந்தரிடம், கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #gajacyclone #parivendhar #gajaeffected
Tags:    

Similar News