செய்திகள்
கைது செய்யப்பட்ட பசீலா.

பாலக்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் திருடிய இளம்பெண் கைது

Published On 2018-11-23 14:52 IST   |   Update On 2018-11-23 14:52:00 IST
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 13 பவுன் நகையை திருடிய இளம்பெண்ணை போலீசார் கை செய்தனர்.
கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு கல்லேக்காடு 2-ம் மைலில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் முகமது ரியாஸ்- ரிஸ்வான் தம்பதி. சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு திருச்சூர் சென்றனர்.

அங்கு வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த 13 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது. கதவு, ஜன்னல் எதுவும் உடைக்கப்படாத நிலையில் திருட்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பாலக்காடு வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அலவி, சப்- இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதே குடியிருப்பை சேர்ந்த பஷீரின் மனைவி பசீலா (வயது 29) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பசீலாவிடம் நடத்திய விசாரணையில் திருட்டு நடந்த வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை திறந்த உரிமையாளர் சாவியை கதவிலேயே விட்டுச்சென்றார். அப்போது பசீலா அந்த சாவியை நைசாக எடுத்துக்கொண்டார். வீட்டு உரிமையாளர் சாவி தொலைந்து விட்டது என்று நினைத்து மாற்றுசாவியை ஏற்பாடு செய்து உபயோகப்படுத்தினார்.

இந்நிலையில் தம்பதி வெளியே சென்றபோது எடுத்து வைத்திருந்த சாவி மூலம் பசீலா கதவை திறந்து 13 பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பசீலாவை கைது செய்தனர்.

விசாரணையில் பசீலா, மாமனாரை வி‌ஷம் வைத்து கொல்ல முயன்ற வழக்கு, கணவரின் பாட்டியை கொன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அடுக்குமாடி குடியிருப்பை அடிக்கடி மாற்றி கைவரிசை காட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News