செய்திகள்

பேராவூரணி கோவில் சார்பில் கஜா புயலால் பாதித்த 2 ஆயிரம் பேருக்கு உணவு

Published On 2018-11-19 15:46 IST   |   Update On 2018-11-19 15:46:00 IST
பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
பேராவூரணி:

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் கஜா புயலின் பாதிப்பு மிக கடுமையாக இருந்து வருகிறது.

குறிப்பாக பேராவூரணி பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக உணவு வழியில்லாமல் மக்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர்.

பேராவூரணி பகுதியில் மெழுகுவர்த்தி, மண்எண்ணெய் இல்லாமல் இரவு நேரத்தை கழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட முடியாமல் வெளியுலகை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

இதற்கிடையே பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகளை கோவில் நிர்வாகத்தினர் வாங்கி அப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்களும் சமையல் செய்து வழங்குகின்றனர்.

அரசின் நிவாரண முகாமுக்கு செல்ல முடியாத பெண்கள், குழந்தைகள் , வயதானவர்கள் கோவிலுக்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

கஜா புயலால் பாதித்தவர்களுக்கு மனதாபிமான முறையில் உணவு வழங்கி வரும் கோவில் செயல்அலுவலர் அமரநாதன் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

இதேபோல் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. #GajaCyclone

Tags:    

Similar News