செய்திகள்

புதுக்கோட்டை- மணப்பாறை பகுதியில் பொதுமக்கள் போராட்டம்- சாலையில் சமையல் செய்து சாப்பிட்டு மறியல்

Published On 2018-11-18 12:31 IST   |   Update On 2018-11-18 12:31:00 IST
நிவாரண உதவிகள் வழங்க கோரி புதுக்கோட்டை - மணப்பாறை பகுதியில் பொதுமக்கள் சாலையில் சமையல் செய்து சாப்பிட்டு மறியல் செய்து வருகின்றனர். #Gaja #GajaCyclone
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தை கஜா புயல் புரட்டி போட்டுள்ளது. மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் 3 நாட்களாக தவித்து வருகின்றனர். சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்திற்குட்பட்ட மாங்காடு, வடகாடு பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் தொய்வு, குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் குறித்து கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும், பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை தீயிட்டு கொளுத்தியும், மரங்களை வெட்டி போட்டும் எதிர்ப்பை தெரிவித்தனர். நடுரோட்டில் சமையல் செய்து சாப்பிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கிராமப் பகுதியில் மரங்கள் முறிந்துள்ளதால் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரும் கிடைக்கவில்லை. இதுவரை எந்த அலுவலர்களும் கிராமப்பகுதிகளுக்கு வந்து அதற்கான பணிகளில் ஈடுபடவில்லை. நகர் பகுதிகளை போன்று கிராமப் பகுதிகளிலும் அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

முதற்கட்டமாக அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் ஜென ரேட்டர்கள் மூலம் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரே‌ஷன் கடைகளில் அத்தியா வசிய பொருட்களை தடையில்லாமல் வழங்க வேண்டும். மேலும் பாலும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி, மரங்கள், வீடுகள், தொழில் என சுமார் ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நிவாரண உதவி செய்ய வேண்டும் என்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்தூர் ஊராட்சி பகுதியில் புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து சாலையில் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கோரி அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிசானத்தூர் விலக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தாசில்தார் ஆரமுததேவசேனா, ஆணையர்கள் வெங்கடேஷ் பிரபு, மகாலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மரங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை பணிகளை அதிகாரிகள் எடுத்ததை தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு இன்னும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மணப்பாறை பகுதியில் கஜா புயலால் பகுதிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் ரத்தினவேல் எம்.பி. உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்தநிலையில் மணப்பாறை அருகே உள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிகளை தம்பிதுரை மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என்று கூறி, அந்த பகுதி மக்கள் உசிலம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களுடைய கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நிவாரண வழங்க கோரியும், சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளக்கோரியும் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மணப்பாறை பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News