செய்திகள்

மின்தடை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீருக்கு அல்லாடும் மக்கள்

Published On 2018-11-18 11:34 IST   |   Update On 2018-11-18 11:34:00 IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை நீண்டு கொண்டே செல்கிறது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:

‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, அரிமளம் உள்பட பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒருசில இடங்களில் பொதுமக்களே சரிந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே பணிபுரிவதை காண முடிகிறது.

திருச்சி, சிவகங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தீயணைப்பு துறையினர் 300 பேர் வந்து, பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டுமானால் மீட்பு பணியாளர்கள் அதிகமாக தேவைப்படுகிற நிலை உள்ளது.

சாய்ந்த மரங்கள் அகற்றப்படாததால் கிராமப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், லாரிகள், கார்கள் செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவரக்கூடிய நிலை உள்ளது. புதுக்கோட்டை நகரப்பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.

வீடுகள் முன்பு மற்றும் தெருக்களில் சாய்ந்த மரங்களை பொது மக்களே வெட்டி அகற்றி இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் வெட்டிய மரக்கிளைகளை எடுத்துச் செல்லக்கூட பணியாளர்கள் யாரும் இல்லை.

மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சார சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டதால் மின்கம்பங்கள் சேதத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சேதமடைந்த மின்கம்பங்கள், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக உடனடியாக புதியவை பொருத்த முடியாததால் மின்சாரம் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது. குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க நினைத்தாலும் உரிய தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.



கிராமங்களில் தேங்கிய மழை நீரை பாத்திரங்கள் கழுவவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மீட்பு பணிகளில் முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆவுடையார்கோவில், திருமயம், மீமிசல், மணமேல்குடி, கொடிகுளம், அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய 7 பகுதிகளுக்கு நேற்று மின்சார சேவை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் இன்னும் புதுக்கோட்டை நகரப்பகுதி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மின்சார சேவை முற்றிலும் இல்லாததால் கடந்த 2 நாட்களாக இரவில் மின்சாரம் இன்றி இருள் நிறைந்து காணப்படுகிறது.

நெடுஞ்சாலை பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியும் மும்முரமாக நடக்கிறது. பொக்லைன் எந்திரம், ராட்சத எந்திரங் களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரக்கிளைகளை நகராட்சி பணியாளர்கள் லாரி மூலம் அப்புறப்படுத்தி வருகின்ற னர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல புயல் தாக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன்பின் தற்போது ‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் தெரிவித்தனர். புயல் பாதிப்பு மீட்பு பணி நேற்று 2-வது நாளாக நடந்த நிலையில், முழுமையாக முடிவடைய இன்னும் 6 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரு வார காலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூறைக்காற்றால் மாவட்டத்தில் மா, பலா, தென்னை மரங்கள் சாய்ந்ததோடு, காய்கறிகள், கரும்புகள், நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரிமளம் பகுதியில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் பல ஏக்கர் கணக்கில் சேதமடைந்துள்ளன.

விவசாயிகளின் விளைபொருட்கள் பாதிப்படைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் உணவு சமைக்கும் பொருட்கள் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News