செய்திகள்

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்

Published On 2018-11-17 08:45 GMT   |   Update On 2018-11-17 08:45 GMT
உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். #DogMeat #DogMeatinChennai
சென்னை:

“பிரியாணி”.. இந்த மந்திர வார்த்தைக்கு மயங்காத அசைவப் பிரியர்கள் யாருமே இருக்க முடியாது. விசேஷம் என்றால் பிரியாணி, விருந்து என்றாலும் பிரியாணி என்று மொகலாயர்களின் சிறப்பு உணவு வகையான பிரியாணி, இன்று தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் ஒரு அங்கமாக இடம்பிடித்து விட்டுள்ளது.

முன்னர் முஸ்லிம்கள் வீட்டு திருமணங்கள் மற்றும் ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டும் அதிகமாக பிரியாணியின் நறுமணத்தை பலர் ரசித்து வந்தனர். ‘மிலிட்டரி ஹோட்டல்’ எனப்படும் முனியாண்டி விலாஸ் போன்ற ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி மிகவும் பிரசித்தியாக இருந்தது.

ஆனால், சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளாக இன்று ஒரு தெருவுக்கு நான்கு பிரியாணி கடைகள் என்னும் அளவுக்கு நமக்கு பிரியாணி மேல் இருக்கும் பிரியம் அதிகரித்து வருகிறது. ஒரு பிளேட் பிரியாணி இவ்வளவு விலை என்பதுபோக ஒரு கிலோ பிரியாணி இன்று எடைபோட்டு விற்கப்படுகிறது.

இப்படி தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி நம்மில் பலருக்கு அக்கறை இல்லை. சிக்கன் பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

பின்னர், மட்டன் பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் செத்த ஆடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல ஆயிரம் கிலோ அளவிலான கெட்டுப்போன ஆட்டிறைச்சியை சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.



ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட இந்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  #DogMeat #DogMeatinChennai 
Tags:    

Similar News