செய்திகள்

டெங்கு கொசு உருவாக காரணமானவர்களுக்கு அபராதம் - கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை

Published On 2018-10-31 16:41 GMT   |   Update On 2018-10-31 16:41 GMT
டெங்கு கொசு உருவாக காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுத்தார்.
கரூர்:

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு திருமாநிலையூர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப்பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன், நேற்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த குடிநீர்த்தொட்டி, குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் நீர் இருக்கும் டப்பாக்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்பினை கலெக்டர் சுட்டி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியில் பழைய சாயப்பட்டறை இருந்த இடத்தில் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், கழிவுப்பொருட்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட மாவட்ட கலெக்டர், இதுபோன்ற கழிவு பொருட்களில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என கூறியும் இதனை அப்புறப்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களே?. இனி அபராத நடவடிக்கை எடுத்தால் தான் சரிபட்டு வரும் என அந்த இடத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.

இதேபோல் ஆட்டோவிற்கான உதிரிபாகங்கள், டயர்கள் போன்ற கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையின் ஓரம் போட்டு வைத்திருந்த நபருக்கும், வீடுகளில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் உரிய பராமரிப்பின்றி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் இருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதத்தொகையாக வசூலிக்க நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அங்கு தேவையில்லாத டயர்களை மழைநீரில் நனையாமலும், நீர் தேங்காமலும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், நகர்நல அதிகாரி ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News