செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பீதி- பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் 107 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதி

Published On 2018-10-31 11:49 GMT   |   Update On 2018-10-31 11:49 GMT
நீலகிரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், என மொத்தம் 107 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #swineflu
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் அப்துல் ரகுமான் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த1-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரை தொடர்ந்து கோத்தகிரியை சேர்ந்த ஒருவரும் கோவையில் உயிரிழந்தார். மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

30 மாணவர்கள்-10 ஆசிரியர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி

இந்தநிலையில் ஊட்டியில் இயங்கி வரும் மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள சர்வதேச பள்ளியில் படிக்கும் 30 மாணவர்களுக்கும், 10 ஆசிரியர்களுக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவதாக தகவல் பரவியது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது

அந்த பள்ளியில் படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், அந்த வகுப்பில் படிக்கும், விடுதியில் உள்ள 27 மாணவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. அந்த மாணவர் மட்டும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இது மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெற்றோர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 80 பேரும், ஆசிரியர்கள், விடுதி ஊழியர்கள் 27 பேரும் என மொத்தம் 107 பேர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

மருத்துவ பரிசோதனைக்கான அவர்களது பெற்றோரின் விருப்பபடி மாணவர்கள் கோவைக்கு சென்றுள்ளனர். இது அவர்களது விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது என்றனர்.

காய்ச்சல் பாதிப்பு குறித்து மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் இரியன் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக 190 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும் 28 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் அவர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். #swineflu
Tags:    

Similar News