செய்திகள்

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கடலூர் நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு

Published On 2018-10-30 04:58 GMT   |   Update On 2018-10-30 04:58 GMT
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கடலூர் நிர்வாகிகள் 10 பேர் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மன்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை:

கடலூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10 பேர் சமீபத்தில் மன்றப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். ரஜினி மக்கள் மன்றத்தின் கடலூர் மாவட்ட கெளரவ செயலாளராக இருந்த ஓ.எல். பெரியசாமி, விருத்தாச்சலம் நகர செயலாளர் ரஜினி பாஸ்கர், விருத்தாச்சலம் துணைச் செயலாளர் தென்றல் முருகன் உள்ளிட்ட 10 பேரை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் சமீபத்தில் நீக்கியிருந்தார். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பின்னர் நீக்கப்பட்ட 10 பேரும் ரஜினிகாந்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதினர். சென்னை வந்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை மீண்டும் மன்றத்தில் இணைத்துக்கொள்வது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் இளவரசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளாக, உறுப்பினர்களாக இருந்த ஓ.எல்.பெரியசாமி, ஆர்.ரஜினிபாஸ்கர், தென்றல் முருகன், பி.தண்டபாணி, ஆர்.மாணிக்கம், ஏ.பன்னீர், எஸ்.வினோத், எம்.ஜி.ராஜேந்திரன், ஆசை தாமஸ், பிரேமா தாமஸ் ஆகிய 10   பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, தலைவரின் ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் மன்றத்தில் மீண்டும் அடிப்படை உறுப்பினராக அனுமதிக்கப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளார்.



மேற்கண்ட மன்ற உறுப்பினர்கள் இனி மன்றப் பணிகளில் தலைவரின் ஆணைப்படி முழுமையாக ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட மன்ற உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இளவரசன் கேட்டுக்கொண்டுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram 
Tags:    

Similar News