செய்திகள்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் அறைக்கு சீல் வைப்பு

Published On 2018-10-29 19:24 GMT   |   Update On 2018-10-30 05:07 GMT
18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். #18MLAs
சென்னை:

தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள விடுதியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி வீடு உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரை இந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம். இரண்டு படுக்கை அறைகொண்ட விசாலமான இந்த வீட்டுக்கு மாதவாடகை ரூ.200 ஆகும். எம்.எல்.ஏ.பதவி காலியான பிறகு வீட்டை காலி செய்யாமல் இருந்தால் மாத வாடகை ரூ.5375 கொடுக்க வேண்டும்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், வெற்றிவேல் உள்பட 18 பேர் சபாநாயகரால் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளை அதிகாரிகள் பூட்டி விட்டனர்.

இப்போது 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.


சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி 18 பேருக்கும் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாகவும் அந்த வீட்டில் உள்ள உங்கள் பொருட்களை எடுக்க விரும்பினால் முன்கூட்டி தகவல் தெரிவித்துவிட்டு எடுத்து செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர். நிலுவையில் உள்ள வாடகை தொகையையும் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். #18MLAs
Tags:    

Similar News