செய்திகள்

திருக்குறள் ஒப்புவித்த 70 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு: முதலமைச்சர் வழங்கினார்

Published On 2018-10-27 09:07 GMT   |   Update On 2018-10-27 09:07 GMT
‘திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு’ திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #Thirukkural #EdappadiPalaniswami
சென்னை:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” எனும் திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிப்பு செய்யும் மாணவ, மாணவியர்கள் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் குறள் பரிசாக ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2011-2012ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 36 பேருக்கு வழங்கப்பட்டு வந்த குறள் பரிசு, 2015-2016ம் ஆண்டு முதல் 50 பேருக்கு என உயர்த்தப்பட்டது.

மேலும், 2018-2019ம் ஆண்டு முதல் 50லிருந்து 70 பேருக்கு குறள் பரிசு வழங்க முதல்-அமைச்சரால் உயர்த்தி ஆணையிடப்பட்டது. இதுவரை 329 மாணவ, மாணவியருக்கு குறள் முற்றோதல் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019ம் ஆண்டிற்கு 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு, குறள் முற்றோதல் பரிசு ஒட்டுமொத்தத் தொகையாக ஒவ்வொரு மாணவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) விஜயராகவன் கலந்து கொண்டனர். #Thirukkural #EdappadiPalaniswami

Tags:    

Similar News