செய்திகள்

தஞ்சை அருகே பள்ளி செல்வதாக கூறி சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2018-10-25 11:06 GMT   |   Update On 2018-10-25 11:06 GMT
தஞ்சை அருகே பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள பஞ்சநதிக் கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவி மேல உளூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

பின்னர் மாலை நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டிற்கு வரவில்லை. உடனே அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து பக்கத்து ஊருக்கு சென்று மகளின் தோழிகளிடம் கேட்டனர். அப்போது உங்கள் மகள் இன்று காலை பள்ளிக்கு வரவே இல்லை என்று அவரது தோழிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி பள்ளி செல்வதாக கூறிவிட்டு எங்கு சென்றார்? காதல் விவகாரத்தில் காணாமல் போனாரா? இல்லை யாரும் கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News