செய்திகள்

தங்கம் முறைகேடு வழக்கு- காஞ்சீபுரம் சோமாஸ்கந்தர் சிலை போலீசாரிடம் ஒப்படைப்பு

Published On 2018-10-25 13:39 IST   |   Update On 2018-10-25 13:39:00 IST
சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் முறைகேடு நடந்துள்ளதையடுத்து அந்த சிலையை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சீபுரம:

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை சிதிலமடைந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது.

இந்த சிலை செய்ததில் தங்கம் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த சிலை கடந்த 2015 -ம் ஆண்டு அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கம் முறைகேடு நடந்துள்ளதாக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் காஞ்சீபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு காவல் துறையினருக்கு நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டார். இதன் பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் புகார்தாரர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினார். 4.75 கிலோ தங்கம் பயன்படுத்தி சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் நவீன கருவியினை வைத்து சிலையை ஆய்வு செய்தனர்.

இதில் சிலையில் கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோயிலின் செயல் அலுவலர், ஸ்தபதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சோமாஸ்கந்தர் சிலையை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த சிலையை கும்பகோணம் கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

கோவிலில் இருந்து சிலையினை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தால் ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய வேண்டும்.

இதற்காக கடந்த சனிக்கிழமை (20-ந் தேதி) சிலைக்கு பாலாலயம் என்ற சிறப்பு பூஜை கோவிலில் நடைபெற்றது. இதையடுத்து சோமாஸ்கந்தர் சிலை மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலை இன்று அதிகாலை 3 மணி அளவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இந்த சிலைகள் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டது. சாமி சிலைகளுடன் கோவில் செயல் அலுவலர் முருகேசன் மற்றும் கோயில் குருக்கள் சென்றனர். சிலைகளை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

சிலைகள் பற்றிய ஆய்வின் முடிவில் ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடுகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News