செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடை நீக்கம்- நீதிபதி அறிவிப்பு

Published On 2018-10-25 07:24 GMT   |   Update On 2018-10-25 07:24 GMT
தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார். #MLAsDisqualificationCase
சென்னை:

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரித்த 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இன்று தீர்ப்பு அளித்தார். காலை 10.25 மணிக்கு நீதிபதி கோர்ட்டுக்கு வந்தார். சரியாக 10.30 மணிக்கு தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனிடம், ‘நான் தலைமை நீதிபதி தீர்ப்பு சரியா? நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு சரியா? என்ற வி‌ஷயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. நான் சுதந்திரமான முடிவுக்கு வந்து, இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளேன்’ என்று கூறினார்.

பின்னர் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-

‘18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு உள்நோக்கமோ, தவறோ இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.

மேலும், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கும் போது என்ன ஆதாரமும், ஆவணங்களும், சூழ்நிலைகளும் நிலவியதோ, அதன் படி தான் சபாநாயகர் முடிவு எடுக்க முடியும். அதன்படி அவர் முடிவு எடுத்துள்ளார். அதில் தவறு இல்லை. அதை தொடர்ந்து பின்னர் நடைபெறும் நிகழ்வுகளை எல்லாம் அவர் பரிசீலிக்கத் தேவையில்லை.

மேலும், முதல்அமைச்சருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதம் கொடுத்த போது, அதை பெற்றுக்கொண்ட தமிழக கவர்னர், இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.


இதை தலைமை நீதிபதி அமர்வு முன்பு 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் கூறவில்லை. மேலும், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன்.

ஏற்கனவே, 18 சட்டசபை தொகுதிகளையும் காலியாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. அதேபோல, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை விதித்து இருந்தது. இந்த தடைகளை எல்லாம் நீக்கி உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

தடைகள் எல்லாம் நீக்கப்பட்டு விட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் 18 சட்டசபை தொகுதிகளை காலியாக அறிவித்து, அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #MLAsDisqualificationCase
Tags:    

Similar News