செய்திகள்

முத்துப்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது

Published On 2018-10-24 16:30 GMT   |   Update On 2018-10-24 16:30 GMT
முத்துப்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரகத்திற் குட்பட்ட தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ரெயில்வே ரோடு அருகில் உள்ள ஏரி பகுதியில் சிலர் பறவைகள் வேட்டையாடுவதாக முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து தஞ்சை மண்டல தலைமை வன பாதுகாவலர் அறிவுறுத்தலின்படி, திரு வாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி உத்தரவின்படி, முத்துப்பேட்டை வனசரக அலுவலர் தாகீர்அலி தலைமையில், வனவர் செல்லையன், வன காப்பாளர் மாரிமுத்து மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் சென்று சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அப்பகுதியில் 3 பேர் வலை விரித்து பறவைகள் பிடித்து கொண்டிருந்ததை கண்டு அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து வலை மற்றும் பொருட்கள், 2 கொக்கு, 2 மடையான் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள மிளாரிக்காடு கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் (வயது 42), தொக்காலிக்காடு கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (42), அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (58) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறவைகளை பறிமுதல் செய்து காட்டில் பறக்கவிட்டனர்.
Tags:    

Similar News