செய்திகள்

முல்லை பெரியாறில் புதிய அணைக்கு அனுமதி- தலைவர்கள் கண்டனம்

Published On 2018-10-24 11:11 GMT   |   Update On 2018-10-24 11:11 GMT
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

சென்னை:

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன்:-

தென் தமிழகத்தின் பாசனத்திற்கு ஜீவாதாரமாக விளங்குகிற முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, இரு மாநில நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.


தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியிருக்கும் முதற்கட்ட அனுமதி என்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும். தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், வஞ்சக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மற்றொரு தாக்குதலே இந்த அனுமதியாகும். எனவே இதனை எதிர்த்து, மத்திய அரசு மீதும் அதன் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீதும் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.

புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணை பகுதி பகுதியாக செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தை தடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது. இரு மாநில மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி கேரளத்தை ஆளும் இடது முன்னணி அரசு புதிய அணை முயற்சியை கைவிட வேண்டும் என முதல் பினரயி விஜயனை தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நதிநீர் சிக்கல்களில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாற்று வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், அதை மதிக்காமல் புதிய அணை கட்ட கேரள அரசு பலமுறை முயன்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது. அப்போதெல்லாம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவு தான் இப்போது புதிய அணைக்காக ஆய்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி பெறும் அளவுக்கு கேரள அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசு இத்தகைய அனுமதியை அளித்திருப்பதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படும் ஆபத்துள்ளது.

எனவே, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்த ஆய்வுகளை நடத்த கேரள அரசுக்கு அளித்துள்ள அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்பப்பெற வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

புதிய அணை கட்டுவதற்கு கேரளா தொடர்ச்சியாக முயற்சி செய்வதும், அதற்கு மத்திய பாஜக அரசு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி வழங்கி இருப்பதும் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். தமிழகத்திற்கு தொடர்ந்து மன்னிக்க முடியாத பச்சை துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.


முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்பட முனைவதும், அதற்கு மோடி அரசு துணை போவதையும் தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன்.

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

Tags:    

Similar News