செய்திகள்

தீபாவளியன்று இலவச 108 ஆம்புலன்சுகளை ஓட்ட மாட்டோம்- போனஸ் கோரி ஊழியர்கள் போராட்டம்

Published On 2018-10-23 09:33 GMT   |   Update On 2018-10-23 09:33 GMT
போனஸ் அறிவிப்பு வெளியிடப்படாததால் தீபாவளி அன்று 108 ஆம்புலன்சுகளை இயக்க மாட்டோம் என்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். #diwali
ஈரோடு:

108 இலவச ஆம்புலன்சுகள் மூலம் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள்.

பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த இலவச ஆம்புலன்சு சேவை மிக உபயோகமாக உள்ளது.

இந்த நிலையில் 108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

போனஸ் அறிவிப்பு வெளியிடப்படாததால் அவர்கள் தீபாவளி அன்று 108 ஆம்புலன்சுகளை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

வரும் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி இரவு 8 மணி வரை மொத்தம் 24 மணி நேரம் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும் போது, ‘‘எங்கள் சங்கத்தை பொறுத்த வரையில் சேவையை நிறுத்தி பொதுமக்களை அவதிக்குள்ளாக்க ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் எங்களை நிர்வாகம் போராட்டத்தில் தள்ளுகிறது என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்’’ என்று கூறினர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 108 ஆம்புலன்சுகள் 35 உள்ளன. இதில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். 70 டிரைவர்கள், 80 மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர்.

தீபாவளி அன்று இவர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். #diwali
Tags:    

Similar News