செய்திகள்

கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2018-10-20 10:06 GMT   |   Update On 2018-10-20 10:06 GMT
கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்தபடியே சுற்றுலா பயணிகள் உற்சாகமாக வலம் வந்தனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. எங்கும் பசுமையாக கண்ணை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கேரட், பீன்ஸ், சவ்சவ், காளிபிளவர், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது.

தற்போது தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

சாரல் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆப் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் ஆனந்தமாக வலம் வர தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News