செய்திகள்
ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளத்தை படத்தில் காணலாம்.

தேவாரம் பகுதியில் கனமழை - 100 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Published On 2018-10-19 05:11 GMT   |   Update On 2018-10-19 05:11 GMT
தேவாரம் பகுதியில் கனமழை பெய்ததால் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. #Rain

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தேவாரம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

எனவே காட்டாறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் பெரம்வெட்டிஓடையில் ஆர்ப்பரித்து வந்ததால் பல்வேறு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

ஓடையில் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக இருந்ததால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் புகுந்தது. சுமார் 100 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்த அரிசி மற்றும் உணவு தானியங்கள் தண்ணீரில் நனைந்தது.

இதன்காரணமாக அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். தகவல் அறிந்த பேரூராட்சி நிர்வகத்தினர் இன்று காலை விரைந்து சென்று ஓடையில் இருந்த ஆக்கிரமிப்பு, மணல்மேடு ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

இதனால் ஓடையில் தண்ணீர் வடிய தொடங்கியது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் கனமழை நீடித்தது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Rain

Tags:    

Similar News