செய்திகள்

தீபாவளிக்கு முன் பஸ் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்

Published On 2018-10-17 04:51 GMT   |   Update On 2018-10-17 04:51 GMT
அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 1-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். அனேகமாக தீபாவளிக்கு முன் ஸ்டிரைக் நடைபெறலாம் என தெரிகிறது. #TNBusStrike #BusStrike
சென்னை:

ஊதிய உயர்வு, பென்சன் பணம், ரூ.7 ஆயிரம் கோடி நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் காலவரையற்ற ‘ஸ்டிரைக்கில்’ ஈடுபட்டனர்.

இதில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொ.மு.ச. சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர் ‘ஸ்டிரைக்’ ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது. இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில் நிலுவைத் தொகை, பென்சன் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதன் அடுத்த கட்டமாக இப்போது 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 1-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ‘ஸ்டிரைக்கில்’ ஈடுபடப்போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். அனேகமாக தீபாவளிக்கு முன் ‘ஸ்டிரைக்‘ நடைபெறலாம் என தெரிகிறது.

இதுபற்றி சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியதாவது:-

போக்குவரத்து கழகத்தில் கடந்த ஸ்டிரைக்கின் போது என்ன நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. எதையுமே அரசு நிறைவேற்றவில்லை.

போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட விசயங்களை கூட அரசு அமல்படுத்தாமல் உள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 11 மாதமாக பென்சன் தராமல் உள்ளனர்.

தொழிலாளர்களுக்கு இனிமேல் பாக்கி வைக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதன்படி நடக்கவில்லை. தொழிலாளர்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாயை தராமல் பாக்கி வைத்துள்ளனர்.


அரசு துறை செயலாளர், போக்குவரத்து அமைச்சர் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் உள்ளனர். நாங்கள் பார்க்க சென்றாலும் பார்க்க அனுமதி கொடுப்பதில்லை. பஸ் தொழிலாளர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். இதனால் 1-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். இந்த வேலை நிறுத்தம் தீபாவளிக்கு முன்பு கூட நடைபெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #TNBusStrike #BusStrike
Tags:    

Similar News