செய்திகள்

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-10-16 16:25 GMT   |   Update On 2018-10-16 16:25 GMT
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #MinisterVijayaBhaskar #SwineFlu
சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.



மேலும், டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பொது மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் அரசர் சீராளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #MinisterVijayaBhaskar #SwineFlu #TamifluTablets
Tags:    

Similar News