செய்திகள்

மின்சார ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது

Published On 2018-10-16 09:52 GMT   |   Update On 2018-10-16 09:52 GMT
மின்சார ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். #arrest

செங்கல்பட்டு:

செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு நேற்று மாலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

ஒரு பெட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது, இதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீஸ்காரர் சந்திரசேகர் அந்த மாணவர்களை தட்டிக் கேட்டார்.

‘‘மற்ற பயணிகளுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்? அமைதியாக வாருங்கள்’’ என்று கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்த போது, தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீஸ்காரர் சந்திரசேகரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீஸ்காரரை தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சட்டக்கல்லூரி மாணவர்கள் அஜித், வின்சென்ட், சுமன்குமார், ஷியாம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கைதான 4 மாணவர்கள் மீதும் போலீஸ்காரரை தாக்கியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #arrest

Tags:    

Similar News