செய்திகள்

குட்கா விவகாரம் - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை

Published On 2018-10-12 10:15 GMT   |   Update On 2018-10-12 10:15 GMT
குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் இன்று 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #Gutkhascam
சென்னை:

குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். செங்குன்றம் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதார துறை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைத்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஜெயக்குமார், சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமி‌ஷனராக பணியாற்றிய போதுதான், செங்குன்றம் குட்கா குடோனில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதன் பிறகு பேட்டி அளித்த ஜார்ஜ், ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஜெயக்குமார் பல வி‌ஷயங்களை எனக்கு தெரியாமல் மறைத்து விட்டார் என்றும் கூறி இருந்தார். இதனை அடிப்படையாக வைத்தே ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனை ஏற்று நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் ஆஜரானார். இன்று 2-வது நாளாக காலை 10.30 மணி அளவில் அதிகாரி ஜெயக்குமார் மீண்டும் ஆஜர் ஆனார்.

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். குட்கா குடோனில் முதல் முறையாக சோதனை நடத்திய போது அங்கு நடந்தது என்ன? என்பது பற்றி ஜெயக்குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டு குறித்தும் ஜெயக்குமாரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு அவர் உரிய பதில் அளித்துள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு துணை கமி‌ஷனராக பணியாற்றியபோது எந்த அடிப்படையில் குட்கா குடோனில் சோதனை நடைபெற்றது என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்தும் ஜெயக்குமார் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

குட்கா குடோனில் சோதனை நடத்திய பின்னர் அதனை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அதன் பிறகு நடைபெற்ற முறைகேடுகள் எதுவும் எனக்கு தெரியாது என்றும் ஜெயக்குமார் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குட்கா குடோனில் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது பற்றியும் ஜெயக்குமார் பல்வேறு தகவல்களை கூறி உள்ளார்.

இவை அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மேலும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. முடுக்கி விட்டுள்ளது.

இதன் மூலம் குட்கா விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. #Gutkhascam
Tags:    

Similar News