செய்திகள்

எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் - ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்

Published On 2018-10-11 05:16 GMT   |   Update On 2018-10-11 05:16 GMT
எம்ஜிஆருக்கு 1984ம் ஆண்டு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வழங்கும்படி அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்த ஆணையம், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.

ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதையடுத்து அமெரிக்காவிற்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். எம்ஜிஆருக்கு அளித்ததுபோன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

1984-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் இதே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் மற்றும் சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இப்போது விளக்கம் கேட்டுள்ளது.



1984ல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வரும் 23-ம் தேதிக்குள் வழங்கும்படி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது? என்ற விவரங்களையும் ஆணையம் கேட்டுள்ளது.

எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதுபோல், ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியாக இந்த ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது. எம்ஜிஆரின் சிகிச்சை விவரங்களை 34 ஆண்டுகளுக்கு பிறகு ஆணையம் கேட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
Tags:    

Similar News