செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Published On 2018-10-09 11:02 GMT   |   Update On 2018-10-09 11:02 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.#Sterlite #thoothukudiProtest
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி ஜெ.ஜெ.நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் முருகேசன் தலைமையில் பொது மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாக தேவையான மருத்துவ வசதிகள் தவறாமல் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.

மேலும் எங்கள் பகுதியிலுள்ள மிகவும் கஷ்டப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அடிப்படை வசதிகள், கோவிலுக்கான நிதியுதவி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் செய்து வந்தனர்.இதனால் எங்கள் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பயன் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் சிலரது சூழ்ச்சியாலும், தேவையில்லாத வதந்தியாலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான பொய்பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் தமிழக அரசு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் அதனை நம்பி வாழ்ந்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு எங்களைப் போன்ற பல்வேறு பகுதி கிராம மக்களுக்கும் கிடைத்து வந்த அனைத்து வசதிகளும், நலத்திட்ட உதவிகளும் தடைபட்டு முடங்கியுள்ளது.

எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Sterlite #thoothukudiProtest
Tags:    

Similar News