செய்திகள்

அரசின் உத்தரவை மீறி பள்ளிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2018-10-05 07:31 GMT   |   Update On 2018-10-05 07:31 GMT
மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதையும் மீறி பள்ளிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். #chennairain
சென்னை:

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி இன்று உருவாகிறது. இது வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் நாளை அது புயலாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. அன்று தமிழகத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர், கடலூர், சேலம், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. நேற்று காலை பெய்ய தொடங்கிய மழை பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்தது. நேற்று இரவிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து கட்டியது.

சிறிது நேரம் இடைவெளி விட்டு பலத்த மழை பெய்து வந்ததால் சாலையில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று காலை கன மழை கொட்டியதால் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் 3 மாவட்ட கலெக்டர்கள் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தனர்.

சென்னையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டார். இதே போல காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் அந்தந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதையடுத்து தனியார் பள்ளிகள் எஸ்.எம்.எஸ். மூலம் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு இன்று விடுமுறை என தகவல் தெரிவித்தன.

இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் இடைவிடாத மழையிலும் விடுமுறை அளிக்காமல் வகுப்புகள் நடத்துவதாக சென்னை மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-

சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பஸ், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு செல்வது பாதுகாப்பாக இருக்காது என கருதி இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடிய விடிய பெய்த மழையால் ஒரு சில பள்ளிகளில் மட்டுமின்றி சாலைகளிலும் மழை நீர் தேங்கி நிற்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி பள்ளிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பில் குறைவு ஏற்பட்டு அசம்பாவிதம் உண்டானால் அதற்கு அந்த பள்ளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் எச்சரித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டதையடுத்து தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என்பதால் 3 நாட்கள் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுகின்றன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், தாம்பரத்தில் கட்டுப்பாட்டு அறை செயல் பட்டு வருகிறது.

மழை வெள்ளம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் கட்டுப்பாட்டு அறை 1077, 044-27237107, 27237207 தாம்பரம் கட்டுப்பாட்டு அறை 044-22410050.

மேலும் வெள்ள பாதிப்புகளை புகைப்படத்துடன் 94450 51077, 94450 72077 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். #chennairain
Tags:    

Similar News