செய்திகள்

என் மகனை போலீசார் அடித்து துன்புறுத்தினார்கள்- பலியான மாணவரின் பெற்றோர் புகார்

Published On 2018-10-05 07:20 GMT   |   Update On 2018-10-05 07:20 GMT
கல்லூரி மாணவருடன் மோதலில் ஈடுபட்ட என் மகனை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று மாணவரின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

திருவொற்றியூரை சேர்ந்தவர் பாரதி. டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 22).

2014-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மணிகண்டன் படிப்பை முடித்து விட்டு மணலியில் உள்ள பெட்ரோலிய கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

கல்லூரியில் படிக்கும் போது மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வேறொரு கல்லூர் மாணவருடன் மோதலில் ஈடுட்டு வந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டு மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 18-ந் தேதி மணிகண்டனை சென்ட்ரல் ரெயில் நிலையம அருகே ஏழுகிணறு போலீசார் கைது செய்தனர். அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களை மிரட்டும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்று அழைத்து சென்றனர்.

சுமார் 50 நாட்கள் ஜெயிலில் இருந்த மணிகண்டன் வெளியே வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மணிகண்டனிடன் தாய் பாரதி கூறியதாவது:-

எனது மகன் கல்லூரியில் படித்த போது கடந்த ஆண்டு காமராஜர் சாலையில் மாநகர பஸ் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் அவனை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.

அந்த சம்பவத்தில் அவனுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தான். அதன் பிறகு ஜாமீனில் வந்த அவன் பெட்ரோலிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்.

கடந்த ஜூன் 18-ந் தேதி ஏழுகிணறு போலீசார் எங்களுக்கு போன் செய்து மணிகண்டனை கைது செய்ததாக தெரிவித்தனர். உடனே நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து சென்றோம். அங்கு என் கண் முன்னேயே மணிகண்டனை போலீசார் தாக்கினார்கள். நான் போலீசாரை சமாதானப்படுத்தினேன்.

எனது மகன் முழுமையாக மாறிவிட்டான். தற்போது அவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறான் என்று கூறினேன். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்களுக்கு பின்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவன் மிகவும் சோகத்துடன் இருந்தான். குடும்பத்தின் பெயரை கெடுத்து விட்டதாக கூறி வேதனைப்பட்டான்.

நான் ஒருமுறை தவறு செய்துவிட்டதாகவும், அதை வைத்து என்னை தவறாக சித்தரித்து விட்டனர். போலீசார் தனக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறினான்.

நாங்கள் அவனை சமாதானப்படுத்தினோம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறினார்.

ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் வைத்து மணிகண்டன் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். போலீசார் யாரையும் ஆதாரம் இல்லாமல் கைது செய்வதில்லை.

ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அவர் அதன்பிறகு தவறு செய்யவில்லை என்றால் அவரை விட்டுவிடுவோம் என்றனர்.

Tags:    

Similar News