செய்திகள்

ராணிப்பேட்டையில் மாட்டு வியாபாரி கொலை- மனைவியின் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்

Published On 2018-10-04 16:28 GMT   |   Update On 2018-10-04 16:28 GMT
ராணிப்பேட்டையில் மாட்டு வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவியின் கள்ளக்காதலன் உத்தரமேரூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

வாலாஜா:

ராணிப்பேட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 31). மாட்டு வியாபாரி. இவரது மனைவி ரிகானாபேகம் (27). இவர்களுக்கு அப்துல்வாஹித் (3) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 7-ந் தேதி அக்பர் ராணிப்பேட்டை வாரச்சந்தைக்கு வீட்டில் இருந்து பைக்கில் சென்றார்.

அப்போது அவர், வன்னிவேடு அருகே கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அக்பரின் மனைவி ரிகான பேகத் தனது கள்ளக்காதலன் காலித் அகமதுடன் சேர்ந்து திட்டமிட்டு கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

கொலையில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரிகானா பேகம் மற்றும் கூலிப்படை கும்பல் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகிய 5 பேரை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் காலித்அகமது, சின்ன குட்டி, ராஜூ ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்தரமேரூர் கோர்ட்டில் கள்ளக்காதலன் காலித்அகமது சரணடைந்தார். பின்னர் அவர், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும், சின்ன குட்டி, ராஜூ ஆகிய 2 குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News