செய்திகள்

பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம்

Published On 2018-10-04 06:43 GMT   |   Update On 2018-10-04 06:43 GMT
தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த அனுமதி கேட்டிருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami
சென்னை:

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் கலந்து ஆலோசிக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இதற்காக சந்திக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது இதுவரை பிரதமர் அலுவலகம் எந்த முடிவும் எடுத்து பதில் அளிக்கவில்லை.

என்றாலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. எனவே விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகளும் டெல்லி செல்ல இருக்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்கள் குறித்தும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் நிலுவையில் உள்ள நிதியை விரைவாக தரக்கோரியும் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.


இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி குறித்து கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 12-ந்தேதிக்குள் பதிலளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இது குறித்தும் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்று தெரிகிறது.

மேலும் தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு உள்ளது. கூட்டணி குறித்தும் பேசப்படும் என்று டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் சில முக்கிய தீர்வுகளை தருவதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். #PMModi #EdappadiPalaniswami
Tags:    

Similar News