செய்திகள்

கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரி நீர்மட்டம் 8 அடி உயர்வு

Published On 2018-10-04 06:36 GMT   |   Update On 2018-10-04 06:36 GMT
கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இன்று காலை வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக இருந்தது. வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தண்ணீர் இருந்தது.

தற்போது கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து உள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 19.98 அடியாக பதிவாகியது. 249 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது

கிருஷ்ணா நதி நீர் வரத்து தற்போது வருவது போல் தொடர்ந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News