செய்திகள்

புதுவைக்கு இன்னும் 4 மாதத்தில் விடிவு காலம் பிறக்கும்- நாராயணசாமி நம்பிக்கை

Published On 2018-10-01 16:45 GMT   |   Update On 2018-10-01 16:45 GMT
டெல்லி, புதுவை ஆகியவற்றின் முட்டுக்கட்டைகளை தாண்டி ஆட்சி நடத்தி வருகிறோம். இன்னும் 4,5 மாதங்களில் விடிவுகாலம் பிறக்கும் என்று நாராயணசாமி பேசினார். #Narayanasamy

புதுச்சேரி:

புதுவை முதியோர் பராமரிப்பு சங்கத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழா ஆந்திர மகாசபையில் இன்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை. அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமி‌ஷனை அமல்படுத்தியுள்ளோம். அதற்கான தொகையையும் மத்திய அரசு தரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகள் மாநிலத்திலும், மத்தியிலும் பதவியில் இருந்தால்தான் நிதி கிடைக்கும். மாற்று ஆட்சி மத்தியில் இருந்தால் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடக்கின்றனர்.

10 ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது டெல்லியில் கேட்டதெல்லாம் கொடுத்தனர். ஆனால் இப்போது கொடுக்கமாட்டோம் என சொல்வதில்லை. அதற்குப்பதில் பரிசீலனை செய்கிறோம் என்கின்றனர். 2 ஆண்டாக நிதி தருவதற்கு பரிசீலனை செய்துகொண்டே இருக்கின்றனர். ஆனால் நாங்கள் எங்கள் முயற்சியை கைவிடவில்லை. நானும், அமைச்சர்களும் மத்திய அரசை தொடர்ந்து அணுகி வருகிறோம். 15-வது நிதிக்கமி‌ஷனில் புதுவை இடம்பெறவில்லை.

மாநிலங்களுக்கான குழுவில் இடம்பெற்றிருந்தால் 42 சதவீத நிதி கிடைக்கும். யூனியன் பிரதேச நிதி கமி‌ஷனில் சேர்த்திருந்தால் 90 சதவீதம் நிதி கிடைத்திருக்கும். ஆனால் தற்போது நமக்கு 26 சதவீதம்தான் நிதி கிடைக்கிறது. ஆனால் ஜிஎஸ்படி வரி கமிட்டியில் புதுவையை மாநிலஅரசாக மத்திய அரசு கருதுகிறது. இதனால் நிதி கமி‌ஷனில் புதுவையை இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது நமக்கு மத்திய அரசின் நிதி ரூ.ஆயிரத்து 650 கோடிதான் கிடைக்கிறது. மாநிலமாக புதுவையை அங்கீகரித்தால் ரூ.3 ஆயிரத்து 700 கோடி நிதி கிடைக்கும். இத்தனை இடையூறுக்கு இடையிலும் பல்வேறு துறைகளில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம். டெல்லி, புதுவை ஆகியவற்றின் முட்டுக்கட்டைகளை தாண்டி ஆட்சி நடத்தி வருகிறோம். இதற்கெல்லாம் 4,5 மாதங்களில் விடிவுகாலம் பிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதியோர் பராமரிப்பு சங்கத்தின் இயக்குனர் டாக்டர் பத்மநாபன் வரவேற்றார். விழாவில் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், சமூகநலத்துறை இயக்குனர் சாரங்கபாணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். #Narayanasamy

Tags:    

Similar News