செய்திகள்

உவரி அருகே வாலிபர் படுகொலை - தொழிலாளி கைது

Published On 2018-09-30 07:59 GMT   |   Update On 2018-09-30 07:59 GMT
உவரி அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Murder

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் அருகே உள்ள உவரியை அடுத்த கூடுதாழையை சேர்ந்தவர் தர்மராஜ் மாற்றுத்திறனாளி. இவரது மகன் ஜெனால்டு (வயது 24). முடிதிருத்தும் தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்தவர் லிகோரி. இவரும் சவரத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராணா சங்கர்(21). தர்மராஜ் குடும்பத்திற்கும், லிகோரி குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராணா சங்கர் மற்றும் லிகோரி ஆகியோர் தர்மராஜ் ஊன்றுகோலாக பயன்படுத்தும் கம்பால் ஜெனால்டை சரமாரியாக தாக்கினர். இதில் ஜெனால்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதையடுத்து ராணா சங்கர் தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெனால்டை மீட்டு லிகோரி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மரம் விழுந்து காயமடைந்ததாக பொய்யான தகவல் கூறி அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெனால்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லிகோரியும், ராணா சங்கரும் சேர்ந்து கம்பால் தாக்கியதில் காயமடைந்தது தெரியவந்தது. மேலும் லிகோரி பொய்யான தகவல் கொடுத்து மருத்துவமனையில் ஜெனால்டை அனுமதித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் லிகோரியை கைது செய்தனர். தப்பியோடிய ராணா சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News