செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2018-09-30 05:34 GMT   |   Update On 2018-09-30 05:34 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrishnan #Militants

கோத்தகிரி:

நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது-

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி நமது ராணுவம் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் முறையில் போர் தொடுத்ததில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலக அளவில் நிரூபித்துள்ளோம்.

இதே நாளில் ராணுவத்தினருக்கு நாம் மரியாதை செலுத்துவது நமது கடமை.

கேரளா, கர்நாடகா பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு பின் புலத்தில் இருந்து கொண்டு பண உதவி செய்ய சிலர் தயாராக உள்ளனர். பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

 


மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் தோறும் குழு அமைக்கப்பட்டு வருகிறது.

நீலகிரியில் பசுந் தேயிலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

தேயிலைக்கு விலை கிடைக்க பாரதிய ஜனதா அரசு பாடுபடும்.

இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

கோத்தகிரி செல்லும் வழியில் மேட்டுப்பாளையம் வந்த பொன் . ராதாகிருஷ்ணன் அங்குள்ள ரெயில் நிலையம் எதிரில் தேங்கி கிடந்த குப்பைகளை வேட்டியை மடித்து கட்டி கொண்டு அகற்றினார்.அப்போது அவர் கூறும் போது, ரெயில் நிலையம் எதிரே குப்பைகள் அகற்றப்படதாதது குறித்து ரெயில்வே மேலாளர் சார்பில் நகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் நகராட்சி நிர்வாகம் இதற்கு செவி சாய்க்காததால் ரெயில்வே துறை சார்பில் நகராட்சிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக கூறுகின்றனர்.

இது போன்று அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #BJP #PonRadhakrishnan #Militants

Tags:    

Similar News