செய்திகள்

முக ஸ்டாலின் குடும்ப சொத்து விவரங்களை வெளியிட தயாரா?- அமைச்சர் உதயகுமார் சவால்

Published On 2018-09-29 13:20 IST   |   Update On 2018-09-29 13:20:00 IST
தங்கள் மீது ஊழல் புகார் கூறும் மு.க.ஸ்டாலின் குடும்ப சொத்து விவரங்களை வெளியிட தயாரா? என்று ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார். #DMK #MKStalin #ADMK #TNMinister #Udhayakumar
சென்னை:

ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘‘ஊழலின் ஊற்றுக்கண்’’ என்று உலகப் புகழ்பெற்ற தி.மு.க.வும், அதன் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கலைக்கப்பட்டது என்றால் அது, 1976ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட தி.மு.க. அரசு தான் என்பது வரலாறு அல்லவா?

சற்றும் நாகரீகம் இல்லாத சொற்களால் அரசையும், அமைச்சர்களையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு, அவர் அளக்கும் படியினாலேயே திருப்பி அளக்கப்படும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

அ.தி.மு.க. அரசின் மீது தி.மு.க.வினர் அடிப்படையற்ற அவதூறு குற்றச்சாட்டுகளையும், ஊழல் புகார்களையும் அள்ளி வீசுவது என்பது புதியதே அல்ல. அ.தி.மு.க.வின் தொடர் வெற்றியால் பொசுங்கிப் போய்க் கிடக்கும் அவர்களது குறுகிய மனது, 1977 முதல் இப்படி வசை பாடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் மனதில் எழுகின்ற சில கேள்விகளை மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வைக்கிறேன். கட்டாயமாக அவர் பதில் சொல்வார் என்று நம்புகிறேன்.


உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர் பெயரிலும் மற்றும் உங்களுக்காக, உங்கள் பணத்தைக்கொண்டு உங்கள் பினாமிகளாகத் தொழில் நடத்தும் ஒவ்வொருவரின் பெயரிலும் உள்ள அசையும் சொத்துக்களின் முழு விவரம், அசையா சொத்துக்களின் முழு விவரம், வங்கி வைப்பீடுகள், பங்கு முதலீடுகள் முதலான விபரங்களை எதுவும் மறைக்காமல் தெளிவாக, ஒவ்வொன்றாக, தனித்தனியாக, மழுப்பலின்றி பகிரங்கமாகச் சொல்ல முடியுமா? முடியாதா? என்பது தான் கடந்த பல ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் குடும்பத்தை நோக்கிய தமிழக மக்களின் கேள்வி.

புரட்சித் தலைவி அம்மா 25.7.2006 அன்று மு.க.ஸ்டாலினின் தகப்பனாருக்கு எழுப்பிய கேள்விகளை இப்பொழுது மு.க.ஸ்டாலினை நோக்கி எழுப்ப விரும்புகிறேன். ‘‘கருணாநிதி மற்றும் அவரது மகன்கள், மகள்கள், மனைவி, துணைவி, மருமகன்கள், மருமகள்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் பற்றி நேருக்கு நேர் கேள்வி கேட்க என் சார்பில் நான் ஒரு குழுவை நியமிக்கின்றேன். பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் முன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களால் முழு விவரத்துடன் பதில் சொல்ல முடியுமா? முடியாதா? வீண் ஜம்பம், வீண் சவடால் வார்த்தைகள் தேவையில்லை. நேரடி பதில் தேவை. எந்தத் தேதி உங்களுக்கு வசதிப்படும் என்று சொல்லத் தயாரா? அதனை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நான் ஏற்பாடு செய்கின்றேன். நீங்கள் தயாரா?’’ அம்மா எழுப்பிய இந்தக் கேள்விகளுக்கு கடைசிவரை பதில் இல்லை. மு.க.ஸ்டாலினிடம் இருந்தும் இந்த வினாக்களுக்கான பதில் வரப்போவதில்லை என்பது ஊரறிந்த உண்மை.

பொறுப்பற்ற அவதூறு பேச்சுக்களை நிறுத்திக் கொண்டு மு.க.ஸ்டாலின் பண்பட்ட அரசியல் பணிகளை மேற்கொள்வது அவசியம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #ADMK #TNMinister #Udhayakumar
Tags:    

Similar News