செய்திகள்

வயநாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வெடிபொருட்கள் வைத்த மாவோயிஸ்டுகள்

Published On 2018-09-26 10:29 GMT   |   Update On 2018-09-26 10:29 GMT
வயநாடு கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாவோயிஸ்டுகள் வெடி பொருளை வைத்து சென்ற சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை பிடிக்க கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வயநாடு அருகே உள்ள பூக்காடுனங்கு பகுதியில் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர்.

அவர்கள் பல்கலைக் கழகத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியை மிரட்டி நுழைவு வாயில் அருகே சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிளக்ஸ் போர்டுகளையும் கட்டினர்.

சுவரொட்டியில் சி.பி.ஐ. மாவோயிஸ்டுகளின் 14-ம் ஆண்டு பிறந்த நாள் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கொண்டாடப்படும் என எழுதப்பட்டு உள்ளது. பின்னர் வெளியே செல்ல காவலாளியிடம் வழிகேட்டனர். காலையில் அந்த வழியாக 3 மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் வழி கேட்டு விட்டு மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் புகுந்துவிட்டனர்.

மாவோயிஸ்டுகள் அங்கிருந்து செல்லும் போது கல்லூரி வளாகத்தில் வெடி பொருளை வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வயநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். மாவோயிஸ்டுகள் வைத்து சென்ற வெடி பொருளை வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது அவை வெடி பொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. வயநாடு பகுதியில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் நடமாட்டம அதிகரித்து வருகிறது. அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News