செய்திகள்

கோத்தகிரி அருகே ஓடும் காரில் தீ விபத்து - சுற்றுலா பயணிகள் 4 பேர் உயிர் தப்பினர்

Published On 2018-09-24 22:22 IST   |   Update On 2018-09-24 22:22:00 IST
கோத்தகிரி அருகே கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் சுற்றுலா பயணிகள் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோத்தகிரி:

கோவை மாவட்டம் கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கருப்புசாமி(வயது 35). மெக்கானிக். இவர் நேற்று காலை தனது மனைவி ராமலதா (32) மற்றும் மகள்கள் தாரிகா (14), சுருதிகா (13) ஆகியோருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளிப்பதற்காக தனது காரில் கோத்தகிரிக்கு வந்துள்ளார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார்.

கார் நேற்று காலை 11.30 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போது கீழ்த்தட்டப்பள்ளம் அருகே காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கருப்பு சாமி காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இறங்கினார்.பின்னர் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை அவர் பார்வையிட்டார்.

அப்போது திடீரென்று காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி காரில் இருந்த தனது மனைவி, மகள்களை உடனடியாக வெளியே அழைத்து வந்ததால் 4 பேரும் உயிர் தப்பினர். தீ மள,மள வென்று எரிய தொடங்கியதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News