செய்திகள்

மானாமதுரை அருகே 25 மயில்களை வி‌ஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

Published On 2018-09-22 11:07 GMT   |   Update On 2018-09-22 11:07 GMT
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அப்பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அடிக்கடி நடந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.


போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 50) என்பவர் மயில்களுக்கு வி‌ஷம் வைத்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

குத்தகை எடுத்து விவசாயம் செய்த நிலத்தில் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் நெல்லில் குருணை மருந்தை கலந்து மயில்களை கொன்றேன் என்று கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News