செய்திகள்

நடிகர் கருணாசை கடுமையான சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- கிருஷ்ணசாமி

Published On 2018-09-21 07:43 GMT   |   Update On 2018-09-21 07:43 GMT
கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். #PuthiyaTamilagam #Krishnasamy #Karunas
கரூர்:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவேந்திர குல வேளாளர்கள் 6 பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். எனவே தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

மேலும் எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6-ந்தேதி திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடத்தப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரை அறிவிக்கும் முழு அதிகாரம் தமிழக அரசின் கையில் உள்ளது.

இந்திய அளவில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் திறன் இல்லாததால் வேலை வாய்ப்புகளை நிரப்ப முடியவில்லை. ஆண்டுக்கு 5 லட்சம் என்ஜினீயர்கள் படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் அதில் 10 சதவீதம் பேர் மட்டுமே திறன் உள்ளவர்கள் வெளியே வருகிறார்கள். மருத்துவம் போன்று நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்துவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் 2, 3 வருடங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.


திறன் பயிற்சிக்கு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கினாலும் அதனை வெளியில் இருந்து நடத்தி வருகிறார்கள். பள்ளி-கல்லூரி கல்வியிலேயே திறன் வளர்ப்பு கல்வியை போதிக்க வேண்டும்.

எச்.ராஜா விவகாரமானது உடனடியாக கைது செய்வதும், பின்னர் கைது செய்வதும் வழக்கின் தன்மையை பொறுத்து உள்ளது. கருத்துரிமைக்கும் எல்லை, வரம்பு, நாகரீகம் உள்ளது. முதல்வர் -காவல் துறை பற்றி நடிகர் கருணாஸ் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #PuthiyaTamilagam #Krishnasamy #Karunas
Tags:    

Similar News