செய்திகள்

ஐகோர்ட்டில் கழிவறை பற்றாக்குறை - மாற்று திறனாளி பாட்டிலில் சிறுநீர் கழித்த அவலம்

Published On 2018-09-20 07:53 GMT   |   Update On 2018-09-20 07:53 GMT
சென்னை ஐகோர்ட்டிற்கு வழக்கு சம்பந்தமாக வந்த மாற்று திறனாளி ஒருவர் கழிவறை பற்றாக்குறையால் பாட்டிலில் சிறுநீர் கழித்தார். #chennaihighcourt
சென்னை:

சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார். மாற்று திறனாளியான இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார். சக்கர நாற்காலியில் செல்லும் விஜயகுமார் நேற்று வழக்கு சம்பந்தமாக கோர்ட்டிற்கு வந்திருந்தார்.

முதல் தளத்தில் உள்ள கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவர் பங்கேற்ற போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டியதிருந்தது. உடனே அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். முதல் தளத்தில் கழிவறை இல்லாததால் அவர் பெரும் தவிப்புக்குள்ளானார்.

இதையடுத்து அவர் முதல் தளத்திலேயே மறைவான இடத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் சிறுநீர் கழித்தார். கீழ் தளத்தில் உள்ள கழிவறைக்கு அவரால் செல்ல முடியாததால் பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் அவருக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து விஜயகுமார் கூறும்போது, ஐகோர்ட்டில் உள்ள கழிவறையை மாற்று திறனாளியான என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறுநீர் கழிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. சக்கர நாற்காலியில் செல்லும் என்னை போன்ற மாற்று திறனாளிகளுக்கு ஐகோர்ட்டில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. கீழ் தளத்தில் தான் உள்ளது.

இதனால் ஐகோர்ட்டின் மற்ற பகுதிகளிலும் மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து மாற்று திறனாளிகள் உரிமைகள் சங்கத்தை சேர்ந்த சுமிதா சதாசிவம் கூறும்போது, நான் ஐகோர்ட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்த போது கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டேன். இதனால் வீட்டிற்கு சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தேன் என்றார்.

இதுபற்றி ஐகோர்ட்டு பதிவாளர் தேவநந்தன் கூறும் போது, பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தில் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. ஆனால் கட்டிடத்திற்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறோம். மாற்று திறனாளிகள் எந்த நுழைவு வாயிலிலும் சென்று வர வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் லிப்ட் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது என்றார். #chennaihighcourt
Tags:    

Similar News